Friday 11 July 2014

விரியனின் விரோதி !

மனிதனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிக்கொண்டேதான் இருக்கிறான். சூழ்நிலைகளை பொறுத்து தன் போராட்டங்களை அமைத்துக் கொள்கிறான். அதனடிப்படையிலேயே அவரவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்தே வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் அமைகிறது! 


இப்படித்தான் தானுண்டு தன் தச்சு வேலையுண்டு என்று அமைதியாக பெர்லினில் கழித்துக்கொண்டிருக்கும்  வேபர், அதையே அவன் கடைசிவரை கடைபிடித்துக் கொண்டிருக்க சூழ்நிலை அனுமதித்திருந்தால் அவன் வாழ்க்கை திசைமாறியிருந்திருக்காது. அவன் எடுத்த இரண்டு தவறான முடிவுகளால், அவன் மட்டுமல்ல, அவன் வளர்ப்பு மகனான ஷ்ரைனெர் வாழ்க்கயையும் புரட்டிப்போடுகிறது. அதிலும் உள்நாட்டுப் போரினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த 1940 களில்,  தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில்  தொழில்முறை கொலையாளியான, மர்மவாழ்க்கை வாழும் ஹான்ஸ் என்பவனை  தன் பாதுகாப்புக்கு நியமித்துக்கொள்ளும் தன் முதல் தவறை செய்கிறான் வேபர். அவனால் நிகழும் மூன்று ரஷ்ய போர்வீரர்களின் மரணம் வேபர் மற்றும் அவனின் வளர்ப்பு மகனின் வாழ்க்கையை திசைமாற்றும் முதல் நிகழ்வாகிப்போகிறது. அதன் பிறகு எப்படியோ 300 டாலர்களை சேமித்து, அதை ஷ்ரைனெரின் கைகளில் திணித்து சிகாகோ அனுப்பும் வரைகூட பெரிய பிரச்சனை நேரிடவில்லைதான். சிகாகோவில் நேர்மையான நல்வாழ்வு வாழவே ஷ்ரைனெர் விரும்புகிறான். ஆனால் விதியும் சமூகச்சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது பரிதாபமே.  இதற்கிடையே, அந்த 300 டாலர்கள் மூன்று ரஷ்யர்களின் கொலைக்கு காரணமான துப்பாக்கியை விற்று வந்த பணமே என்ற உண்மை தெறியவருகிறது. இதுவே வேபர் செய்த  இரண்டாவது மிகப்பெரிய தவறாகிப்போகிறது. இதனால் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும் தன் வளர்ப்பு தந்தையை காப்பாற்றும் பொறுப்பு ஷ்ரைனெருக்கு. அதற்கு தேவை பணம்! அப்போதுதான் ஷ்ரைனெர் தடம் மாறுகிறான். விபரித முடிவுக்கும் வருகிறான். அப்போதுதான் நேர்மையான வாழ்வுக்கு திரும்பியிருக்கும் ஹான்ஸின் மனதை மாற்றி தொழிலை கற்றுக்கொண்டு நாம் எதிர்பார்க்காத மிக பயங்கரமான தொழில்முறை  கொலையாளியாகிறான் ஷ்ரைனெர். புலி வால் பிடித்தக் கதையாக அதுவே அவன் வாழ்வில் இரண்டர கலந்துவிடுகிறது.

சமீபத்தில் இப்படி ஒரு வீரியம் மிக்க காமிக்ஸ் கதையை நான் படித்ததில்லை. ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படத்துக்கு இணையாக ஒவ்வொரு பக்கமும்  பரபரக்கிறது. அதிலும் ஹான்ஸ் ஷ்ரைனெருக்கு கொடுக்கும் பயிற்சிகள், வாடிக்கையாளர்களை சந்திக்கும் யுக்தி என கதாசிரியரும், ஓவியரும் கலந்துகட்டி மிரட்டியிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.

எங்கே மீண்டும் தவறான பாதைக்கு திரும்பி விடுவோமோ என்ற பயத்தில் ஹான்ஸ் தன் உள்ளங்கையில் தானே சுட்டுக்கொண்டு ஊனமாக்கி கொள்வதும், தன் வளர்ப்பு மகனின் தவறான பாதைக்கு காரணமாகி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் வேபருக்கு ஏற்படும் இறுதி முடிவும் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.  

கால ஓட்டத்தில் ஷ்ரைனெரின் தோற்ற மாற்றங்களில் ஓவியரின் பிரமிக்க வைக்கும் திறமை
 ஏற்கனவே 18 பாகங்களாக வெளிவந்து மிக மிரமாண்டமான வெற்றி பெற்ற இரத்தப்படலம் தொடரின் ஒரு நெகட்டிவ் பாத்திரத்தின் முன்கதையாக இப்போது வந்துள்ளதுதான் இந்த விரியனின் விரோதி. இக்கதையின் ஹீரோ ஷ்ரைனெர் எனும் மங்கூஸ் பாத்திரத்தை இரத்தப்படலம் கதையுடன் அழகாக இணைத்த கதாசிரியரின் திறமை பாராட்டும்படி இருக்கிறது. இக்கதையின் தமிழாக்கம் இந்த ஆண்டு  இதுவரை வெளிவந்தவைகளுள் மொழிபெயர்ப்பில் இதுதான் பெஸ்ட் என்பேன். 


          
இக்கதையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவைகளை பெரிதுபடுத்தும் அளவுக்கு அவசியமில்லை என்பதே என் கருத்து. 

மொத்தத்தில் இவன் வேற மாதிரி இந்த விரியனின் விரோதி !

லயன், முத்து காமிக்ஸ்களை வெளியிடும் பிரகாஷ் பப்ளிஷர்சின் ஜூலை மாத வெளியீடான விரியனின் விரோதி ஆன்லைனில் http://lioncomics.worldmart.in/index.php?categoryID=16 என்ற முகவரியில் கிடைக்கிறது!

8 comments:

  1. அடடே¡

    ரொம்ப நாள் கழிச்சு உங்களிடம் இருந்து ஒரு பதிவு.

    சூப்பர்.

    ReplyDelete
  2. சூப்பர் சார் . அடிக்கடி முயற்சி செய்யுங்கள் சார்

    ReplyDelete
  3. சூப்பர் விமர்சனம்! எப்போதும் மனதில் நிற்கும்படியான ஒரு ஆழமான கதை இது!

    ReplyDelete
  4. கதையை படிக்க சொன்னா பதிவே போட்டுடிங்க. சூப்பர்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வணக்கம் இந்த தளத்திற்கு நான் புதியவன் அடிக்கடி பதிவுகளஇடவும்.்

    ReplyDelete