Tuesday, 5 August 2014

குத்து...மொத்து... முருக்...மிடுக் “டெக்ஸ்” !

சட்டம் அறிந்திரா சமவெளி !வில்லனின் கைக்கூலி பில் கார்மேனை சந்திக்கும் ஆரம்பகட்டம்...

கார்ஸன் : சாருக்கு கோபம் வரும் முன்பாக உனக்கு தெரிந்த சங்கதியெல்லாம் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்து தொலைத்து விடு. அவருக்கு கோபம் வந்துவிட்டால் உதை வாங்கும் உன்பாடு மட்டுமல்ல தூக்கிவிடும் என்பாடும் திண்டாட்டம்தான்!

அப்போது குத்துவிட ஆரம்பிப்பவர் கதை முடியும்வரை அவருடைய முஷ்டி பிஸியாகவே இருக்கிறது!

ஓசை படாமல் பின்வாசல் வழியாக வில்லன் மோரிஸனை அவன் கோட்டைக்கே சென்று சந்திக்கும் நேரம்... 

டெக்ஸ் : கதவை நீ தட்டுகிறாயா?
கார்ஸன் : அந்த கௌரவத்தை உனக்கே விட்டுக்கொடுக்கிறேன் நண்பா.
டெக்ஸ் : என்னுடைய வழி தனி வழி!

டெக்ஸ் காலால் ஒரு எத்துவிட கதவு படீர்....

யெஸ்... ஒரு பெரிய கஞ்சி தொட்டிக்குள் முக்கி எடுத்து காயவைத்தது போல்தான் இந்த கதைமுழுவதும் படு விறைப்பாக திரிகிறார் டெக்ஸ் வில்லர்! இது ஒரு 227 பக்க  அக்மார்க் பற பற, சுரு சுரு கதை. டெக்ஸின் துப்பாக்கியை விட அவருடைய கைதான் பெரும்பாலும் பெசுகிறது! 

இந்த கதையில் கார்ஸன், கிட், செவ்விந்தியன் என்று டெக்ஸ் டீம் அனைவருமே இருக்கிறார்கள். ஆம் இருக்கிறார்கள். ஆனால் கதை நெடுகிலும் டெக்ஸ் மட்டுமே ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்! 

கதை என்னவோ மிகச்சாதாரண கதைதான். ஒரு சட்டவிரோத கும்பலிடமிருந்து ஒரு நகரை மீட்டெடுக்கும் பழைய பார்முலா கதைதான். ஏற்கனவே பல டெக்ஸ் கதைகளில் நாம் படித்தவைகள்தான். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய டெக்ஸின் அதிரடி அதகளம் வாசிப்போரை அசரடிக்கிறது.

” இந்தக் கதையில் நான் பணி செய்த நாட்கள் முழுவதுக்கும் ஒரு சண்டியரைப் போலவே விறைப்பாகச் சுற்றித் திரிந்தேன் என்றே சொல்லலாம் ! 'ஏன் ?' என்றால் உதை '; எதற்கென்றால் குத்து ! 'ஐயோ என்றால் மொத்து ! 'என்பது தான் இக்கதையின் முழுமைக்கும் டெக்சின் தாரக மந்திரம் ! மனுஷன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டை போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகசமோ - என்னவோ - ஓங்கிய முஷ்டியானது 224 பக்கங்களுக்கும் இறங்கிய பாட்டைக் காணோம் ! எழுதி முடித்த போது விரல்கள் வலித்ததை விட, வில்லன்கள் வாங்கிய உதைகளை கிட்டே இருந்து பார்த்தது போல் என் தாடை தான் வலித்தது ! ஆக்ஷன் ருத்ரதாண்டவம் தான் ! “  

இதை ‘சட்டம் அறிந்திரா சமவெளி’ தயாரிப்பில் இருந்தபோது எடிட்டர் விஜயன் அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டதுதான்.  அவரது வார்த்தைகள் எதுவும் மிகையில்லை என்பது இக்கதையை படித்த அனைவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். ஒரு இரண்டு நாட்களாவது விரைப்பாக திரிந்திருப்பார்கள்! 

என்னைக் கவர்ந்த பிற விஷயங்கள் :

கதை நெடுகிலும் கார்ஸனின் நகைச்சுவை வசணங்களும், அதற்கு வழக்கம்போல் தன் நண்பனை வெறுப்பேற்றும் வகையில் டெக்ஸ் தரும் பதில்களும். அதிலும் நால்வரும் மாறுவேடமிட்டு கோச் வண்டியில் பயனிக்கும்போது அவர்கள் அடிக்கும் லூட்டிகள் லக்கி லூக்கையே மிஞ்சுகிறார்கள் என்றால் மிகையில்லை!

டெக்ஸ் வில்லர் கதையை முழுவதும் கலரில் படிப்பது முழு மனநிறைவைத் தருகிறது!

‘நிஷ்டூரம்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல், சரளமான எளிய தமிழ் வார்த்தைகளைக்கொண்டு மொழிபெயர்த்திருப்பது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது!

இக்கதையில் குறை என்று சொன்னால் அவ்வளவாக திருப்தி தராத க்ளைமாக்ஸ் மட்டுமே என்பது எனது கருத்து!

கடந்த 2ம் தேதி வெளியான லயன் 30வது ஆண்டு மலர்,  தி லயன் மாக்னம் ஸ்பெஷல் இதழில் பிரதான கதையாக வந்து அனைவரின் வரவேற்பையும் அள்ளியிருக்கிறது இந்த டெக்ஸ் வில்லர் ருத்ரதாண்டவமாடும் “சட்டம் அறிந்திரா சமவெளி” ! இக்கதையை தேர்வு செய்த எடிட்டருக்கு நன்றி!!

மொத்தத்தில் இந்த “சட்டம் அறிந்திரா சமவெளி” காமிக்ஸ் வாசகர்களை குதூகலப்படுத்தும் அதகளம் !     

Saturday, 2 August 2014

THE லயன் MAGNUM ஸ்பெஷல் - ஃபர்ஸ்ட் லுக் !

The Lion Magnum Special :

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “லயன் காமிக்ஸ் 30வது ஆண்டு மலர் - தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” கம்பீரமாக ஈரோடு புத்தகத் திருவிழாவில்  வெளியாகிவிட்டது. லயன் - முத்து பிரத்யேக ஸ்டாலில் பரபரப்பாக விற்பனையாவதாக நண்பர்கள் மூலம் வந்த செய்திகள் தெறிவிக்கின்றன! புதுவையிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் எங்கள் ப்ளான் கடைசி நேரத்தில் பனால் ஆனது எனக்கு மிகுந்த வருத்தமே!  


பேக்கிங் :


ஒரே வார்த்தை, அசத்தல்! ரொம்பவே மெனக்கெட்டு, எந்த குறையும் சொல்லமுடியாத வகையில், சூப்பரான அட்டைப் பெட்டியில் இரண்டு வெவேறான சைஸ் புத்தகங்கள் கொஞ்சமும் டேமேஜாக வழியே இல்லாமல் மிக கவனமாகஅதேசமயம் நல்ல தரமாக பேக் பண்ணி வந்துள்ளது பாராட்டும்படி உள்ளது! இதற்கே நிறைய நேரம் விழுங்கியிருக்கும்!  எனக்கு வந்த புத்தகங்களின் பேக்கிங்கை பாருங்களேன்......
அட்டைபடங்கள் : 

LMS - புக் நெ . 1 :


பேக்கிங்கை பிரித்து புத்தகத்தை கையில் எடுக்கும்போதே வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அட்டகாசமான திக்கான அட்டைகள் (Hard Bound). காமிக்ஸ் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய முழு திருப்தி அளிக்கிறது. முன் அட்டையில் டெக்ஸ் கம்பீரமாக காட்சியளிக்க, பின் அட்டையும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அட்டைப் படங்கள் மிதமான ஜிகினா வேலைப்பாடுகள் சூப்பர்!    LMS - புக் நெ. 2 :


மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம், வழக்கமான பெரிய சைஸில் நார்மலான அட்டைகளுடன் வெளிவந்துள்ளது. முன் அட்டையில் டைகர் சோலோவாக கம்பீரமாக போஸ் கொடுக்கிறார். பின் அட்டையில் லக்கி மற்றும் ரின் டின் கேன் என்று பல வண்ணங்களில் கவற்கிறது. ஆனால் முதல் புத்தகத்தை போலவே இதற்கும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். 

பேப்பர் குவாலிட்டி - கலர் & கருப்பு-வெள்ளை பக்கங்கள் :

மேக்னம் ஸ்பெஷல் முதல் புத்தகம் மொத்தம் 770 பக்கங்கள். அதில் 426 வண்ணப் பக்கங்கள். டெக்ஸ் 227 பக்கங்களில் கலரில் அதிரடி செய்கிறார். குறை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கலர் பக்கங்கள் கலக்கலாக உள்ளது. கருப்பு வெள்ளை பக்கங்களை பொறுத்தவரை “கம் பேக் ஸ்பெஷல்” புத்தகத்தில் பயண்படுத்திய தாள்களின் தரத்தில் கவர்கிறது. இந்த முதல் புத்தகத்தில் என்னை மிகவும் கர்ந்தது பைண்டிங் சர்வதேச தரத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதே! 

மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம் மொத்தம் 136 பக்கங்கள். அட்டை டு அட்டை பெரிய சைஸில்  கலரில் அசத்துகிறது. 

இந்த “லயன் 30வது ஆண்டு மலர்” 900 பக்கங்களுக்கு மேல் ஒன்பது வெவ்வேறான ரசனையுடன் கூடிய கதைகளுடன் அனைத்து தரப்பு காமிக்ஸ் ரசிகர்களையும் கவரும் வகையில் வெளிவந்து பிரமிக்கச் செய்கிறது!!


மொத்தத்தில் “The லயன் Magnum ஸ்பெஷல்”  -  தாறுமாறு!!
 


நண்பர் சவுந்தர் தனது வழக்கமான ஸ்டைலில் LMS பற்றிய சிறப்பு பதிவில் நம் கண்ணுக்கு விருந்தளித்துள்ளார். பின்வரும் முகவரியில் சென்று ரசியுங்கள்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2014/08/125-lion-magnum-special.html


ஓகே நண்பர்களே, இதோ என் அபிமான ஹீரோ டெக்ஸ் வில்லர் குழுவினர்களுடன் சமவெளிகளிலும், பாலைவனங்களிலும், செவ்விந்தியர்களுடனும் பயனிக்க ஆயத்தமாகிவிட்டேன்! Bye.