Thursday, 31 October 2013

ஆசை ஆசையாய் !

இதமான காற்று....
சுகமான சாரல்மழை
கனமழைக்கு பிறகு அமைதியான நிசப்தம்
ஆனந்தக் கண்ணீர் சொட்டும் மரங்கள்
தெருவோரங்களில் விரைந்தோடும் ஜில்லென்ற நீர்....


“நாளையிலிருந்து தீபாவளி விடுமுறை”
மனம் ஆர்ப்பரிக்கிறது சாமிநாதனுக்கு....
பாக்கெட்டில் இருக்கும் மொபைல் சினுங்கவே
டீக்கடையோரம் பைக்கை நிறுத்துகிறான் சாமிநாதன்!
”என்னங்க, ஆபிஸ்விட்டு கிளம்பியாச்சா?” என்ற மனைவின் கேள்விக்கு
”ஆச்சுமா” என்று பதிலளித்துவிட்டு...
எங்கேயோ டயல் செய்கிறான்!
“மேடம் அனுப்பிட்டிங்களா?”
“அனுப்பியாச்சு சார்! நாளைக்கு கிடைக்கும்”
எதிர்முனை பதிலால்
மலர்கிறது முகம்! 

”அப்பா, நாங்க எப்பவோ ரெடி” என்ற மகனிடம்
“இதோ போகலாம்டா” என்று கூறிவிட்டு
மனைவி தந்த டீயை பருகுகிறான் சாமிநாதன்!
”டேய் சாமிநாதா, உன் தங்கை பசங்களையும் மனசுல வச்சுக்கோடா”
உள்ளறையிலிருந்து அம்மாவின் குரல்!
”ச்சே! இந்த பண்டிகையெல்லாம் ஏன்தான் வருகிறதோ”
சற்றே சலிப்புடன் பைக்கை உதைக்க....
“என்னங்க போனஸ் பணம் எடுத்துட்டிங்களா”
கேட்டுக்கொண்டே அமரும் மனைவியையும்...
எதிர்வீட்டு சிறுமியை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே
அமரும் மகனுடனும்...
பைக்கை விரட்டுகிறான் சாமிநாதன்!

மனிதர்களுக்குத்தான்
எத்தனை கஷ்டங்கள்,
எத்தனை எத்தனை பிரச்சனைகள்!
ஆனால்....
பண்டிகை என்று வந்துவிட்டால்
தானும் சந்தோஷப்பட்டு
மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதில்தான்
எவ்வளவு ஆனந்தம்!

இதோ.....
கடைவீதிகளில்தான்
எவ்வளவு மனிதர்கள்!
ஜவுளி கடைகளில்பேரம் பேசும்
பலதரப்பட்ட குரல்கள்!
சிறிதேனும் தன் குடும்பத்தாரை
சந்தோஷப்படுத்தவேண்டும் எனத்துடிக்கும்
மனித மனங்கள்!

“என்னங்க, என் தங்கச்சி பசங்களுக்கு”
என்ற மனைவியை முறைத்தாலும்,
அவள் ஆசையை நிராகரிக்காமலும்...
“அப்பா, இன்னும் கொஞ்சம் பட்டாசுப்பா” என்று
அடம்பிடித்த மகனையும் சமாளித்துவிட்டு,
வீடு வந்து சேர்ந்தபோது
இரவு மணி பதினொன்றை தொட்டிருந்தது கடிகாரம்!

மறுநாள்....
தீபாவளிக்கு முதல் நாள்
பிற்பகலில் அவசரமாக கிளம்பி
கொரியர் வாசலில் நிற்கிறான் சாமிநாதன்!
”இன்னும் வரலையே”
என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு
”நல்லா பாருங்க சார்” என்றான் உடைந்த குரலில்!
“ஓ சாரி சார், இதோ இருக்கு”
என்றவுடன்தான் மூச்சே வந்தது சாமிநாதனுக்கு!
பார்சல் கணத்தை கைகளில் உணர்ந்தான்!
இப்போது மழை முற்றிலும் நின்றிருந்தது!
மேகக்கூட்டங்களின் விடுதலையிலிருந்து
சூரியன்  சந்தோஷமாய் எட்டிப்பார்த்தான்!


தீபாவளியன்று மாலைவரை
வேலைபளுவால் பார்சலை பிரிக்கமுடியவில்லை!
ஆனால்...
அவன் மனம் அதைச்சுற்றியே இருந்தது!
இரவு கவிழும் நேரம்,
இனியும் தன்னால் பொருக்க முடியாது என்பதால், 
தன் அறைக்குச் சென்று
பார்சலை பிரித்தான் சாமிநாதன்!
பளிச்சென்று வழுக்கியவாறு,
அவன் மடியில் வந்து விழுந்தது
“தீபாவளி ஸ்பெஷல்”

புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தான்!
ஆசையாய் தடவிக்கொடுத்தான்!
அவன் வாய் முனுமுனுத்தது
“ஆஹா எத்தனை ஆண்டுகள்”
அவன் நினைவுகள் சற்றே
பின்னோக்கிச் சென்றன!
’லயன் காமிக்ஸ் தீபாவளி மலர்’
தன் சிறு வயதில் வாங்கிப் படித்த
பரவச நினைவுகளில் மூழ்கினான்!
பால்ய வயதிலும்
காமிக்ஸ் படித்தோம்!
எதையும் யோசிப்பதில்லை!
உற்சாகம் மட்டுமே மனதில்!

இன்றோ...
இந்தவயதிலும் படிக்கிறோம்!
எவ்வளவோ குறை சொல்கிறோம்!
ஒரிஜினலுடன் ஒப்பிடுகிறோம்!
மொழிபெயர்ப்பு கோணல் என்கிறோம்
ஏதோ தமிழறிஞர்கள்போல!
ஓவியங்களை பழிக்கின்றோம்
கலைமாமனிகள் போல!
பைண்டிங் சரியில்லை,
பசை ஒட்டவில்லை,
மை சரியில்லை 
என்றெல்லாம்கூட கலாய்க்கின்றோம்!
ஆனால்....
ஆயிரம் குறைகண்டாலும்
படிக்காமல் விட்டு விடுகிறோமா?
காமிக்ஸ் காதல் என்பதுதான்
பொய்யாகிடுமா?

இதோ....
பக்கங்களை புரட்டுகிறான் !
வெட்டவெளிகளும்,
பாலைவனங்களும்,
மலைக்குன்றுகளும்,
குதிரைகளும்,
செவ்விந்தியர்களும்.... 
அவன் கண்முன்னே விரிந்தன!
தன் வயதை மறந்தான்...
தன்னை சுற்றி நடப்பவைகளை மறந்தான்.....
பட்டாசு சத்தங்கள் அவன் காதில் விழவில்லை......
“பொம்ம புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டியா”
அம்மாவின் குரலை அலச்சியபடுத்தினான்....
“இனி இந்த உலகம் இவருக்கு மறந்துவிடும்” என்று
தலையில் அடித்துகொண்டே செல்லும்
மனைவியை கண்டுகொள்ளவில்லை....
அனைத்துக் கவலைகளையும் மறந்தான்!
காமிக்ஸ் காதல் அவனை
கட்டிப்போட்டது!
இருபது ஆண்டுகள்
பின்னோக்கிச்சென்ற உணர்வு!
அவனை தனக்குள் இழுத்துக்கொண்டது காமிக்ஸ்!


விடுமுறை முடிந்தது....
அலுவலகம் கிளம்புகிறான் சாமிநாதன்!
”அப்பா, அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்காப்பா”
மகனின் ஆதங்கக் கேள்வி!
பதில் ஏதும் கூறாமல்
பைக் சாவியுடன் திரும்பும் சாமிநாதனின்,
ஆதங்கப் பார்வையிலிருந்து அகலமறுக்கிறது
டேபிளில் பளிச்சென்று சிரிக்கிறது!
டெக்ஸ் வில்லரின்
“தீபாவளி ஸ்பெஷல் 2013”



ஆசிரியரின் மடல் (காமிக்ஸ் டாட் காம்)




இரண்டு கதைகளின் ஆரம்ப பக்கங்கள்  உங்கள்  பர்வைக்கு!




இதுவரை பதிவை முழுவதும் பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி!    உங்களுக்கு இது ஒரு கவிதையாகவோ அல்லது ஒரு சிறுகதையாகவோ அல்லது கதை-கவிதையாகவோ அல்லது மொக்கையாகவோ எப்படி தோன்றியிருந்தாலும் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!


காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  'முதலைப்பட்டாளம்' நண்பர் கலீல் அவர்களின் மாலைமதி காமிக்ஸ் பற்றிய ஒரு அதிரடி பதிவு! அவரது ஸ்பெஷல் பானியில்!
mudhalaipattalam.blogspot.in/2013/10/afi.html?

2.   நண்பர் ராஜ் முத்துக்குமார் அவர்களின் ’மன வானில்’ அக்டோபர் மாத இதழ்களின் விமர்சனப்பதிவு!
http://www.comicsda.com/2013/10/xii-bluecoats-tamil.html

3.   நண்பர் சௌந்தர் அவர்களின் தீபாவளி இதழ்களின் சுடச்சுட பதிவிற்கு
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/108-lion-comics-deepavali-malar-2013.html



இப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே!  விரைவில் சந்திப்போம்!

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்










Friday, 11 October 2013

எங்கே செல்லும் இந்த இரத்தப் பாதை !

மேஃப்ளவர் !

இந்த வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? அமெரிக்கா வரலாறு கொஞ்சம் சொல்லுங்க தெரிஞ்சிப்போம், என்று கேட்டால் உடனே கொலம்பஸிலிருந்து ஆரம்பிப்பார்கள். அது 1600 க்கு முந்தைய வரலாறாக இருக்கும். ஆனால் 1600 களுக்கு பிறகு ஐரோப்பியர்களின் குடியேற்றங்களுக்குப்பின்  அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. 1620 -ல் ஐரோப்பியர்களை முதன்முதலில் அப்பகுதிக்கு சுமந்து சென்ற கப்பலின் பெயரே இந்த “மேஃப்ளவர்”. இந்த குடியேறிகளின் நோக்கம் “தங்கம்” என்பதே முக்கியமான காரணியாக  இருந்திருக்கிறது. இதற்காக அவர்கள் அனுபவித்த வேதனைகளும், கொடுத்த விலைகளும் ஏராளம். இன்று அமெரிக்கா உலகநாடுகளின் பெரியண்ணன் எனப்போற்றப்படுவதற்கும், பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், அந்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் இந்த குடியேறிகளே எனலாம்!

அதுசரி, இப்போ எதுக்கு இந்த வரலாறு என்று நீங்கள் முனுமுனுப்பது புரிகிறது.  வேறொன்றும் இல்லை, இந்த மாதம் லயன் காமிக்ஸ் வெளியீடான “இரத்தப்படலம்” தொடரில் “மேஃப்ளவர்” வலிய அதேசமயம் சுவராஸ்யமாக திணிக்கப்பட்டிருக்கிறது! அமெரிக்க வரலாற்றை மிஞ்சிவிடும்போல் உள்ளது நமது கதாநாயகன் மக்லேன் வரலாறு! கதாசிரியர்கள் அவரையும் நம்மையும் நிம்மதியாக விடப்போவதில்லை என்று தெளிவாகிறது. பல ஆண்டுகளாக தன்னைத்தானே தேடியலையும் நம்பர் XIII, இதிலும் அதே வேலையை தொடர்கிறார். வான்ஹமே விட்டுச்சென்ற மிகப்பெரிய பணியை, பிரபல தோர்கல் புகழ்  யிவெஸ் செண்டே, ஓவியர் இயெனரி ஜிகுநௌ ஜோடி இந்த புதுத்தொடருக்கு பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் அபார உழைப்பு பக்கத்துக்கு பக்கம் பிரமிக்கச் செய்கிறது.



XIII ன் உயிர்பலி ராசி !
 


கதையின் நாயகன் மக்லேனுக்கு ஒரு ராசி உண்டு. அவர் உதவிநாடிச் சென்றாலோ அல்லது அவருக்கு யாராவது உதவி செய்ய முற்பட்டாலோ பெரும்பாலும் அடுத்த சில பக்கங்களில் அவர்களின் கதை முடிந்துவிடும். அதே ராசி இதிலும் தொடரவே செய்கிறது. ஃபேஸ்புக் உதவியுடன், தன் சிறு வயது நண்பன் ஜிம் ட்ரேக்கை தேடிச்செல்லும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது, இக்கதையின் முதல் பலியாடு ஜிம் ட்ரேக்தான் என்று. அவரை போட்டுத்தள்ளுவது   யூலியானா எனும் அழகான ஃபிகர். இவள் USAFE என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்த அமைப்புதான் மக்லேனை கதை முழுவதும் ஓடவைக்கிறது. இனிவரப்போகும் கால் நூற்றாண்டு?! தொடருக்கும் இவர்கள்தான் மக்லேனை  அலையவிடப் போகிறவர்கள் என்பது நமக்கும் தெளிவாகிறது!


அடுத்து தொடரும் மறுபாதியில் இந்த USAFE குழுவின் சதிவலையால், காந்தவிழியாள் ஜோன்ஸ், தாலிபான் தீவிரவாதிகளின் உதவியுடன் ஒரு வித்தியாசமான பிரதேசத்தில் பிணையக்கைதியாக்குகிறார்கள். இதன் மூலம் மக்லேனை பணியவைப்பது USAFE குழுவின் நோக்கமாகும். XIII தனது நண்பர் ஜெனரல் காரிங்டன் உதவியுடன்  மேஜர் ஜோன்ஸை   எப்படி மீட்கிறார் என்பது மீதி பக்கங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஆக்‌ஷன் மற்றும் பல உயிர்பலிகளின் நடுவே பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு நடுவே பெட்டி எனும் அழகு தேவதை மூலம் மேலே சொல்லப்பட்ட மேஃப்ளவர் கப்பலின் வரலாறும் வருகிறது! இந்த கப்பலுக்கும் நம்பர் XIII க்கும் என்ன தொடர்பு என்று புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!


தமிழில் புதிதாக வந்திருக்கும் இந்த கதைத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது கதையை விட, சித்திரங்களும் அதற்கான வண்ணக்கலவைகளுமே. நுனுக்கமான பல விஷயங்களை அப்படியே நம் கண் முன்னே தத்ரூபமாக நிறுத்தி நம்மை மெய்மறக்கச்செய்திருக்கிறார்கள். அதனாலேயே கதையின் பல குறைகளும் அமிழ்ந்துபோகச்செய்கிறது!

என்னைப்போன்றவர்கள் இதன் ஒரிஜினல் ஆல்பங்களை படிக்காமல், முதல்முறையாக தமிழில் படிக்கும்போது இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப்பெறும் என்பதில் ஐயமில்லை!  

காமிக்ஸ் மினி டாட் காம் !

1.  இரத்தப்படலம் புத்தகத்தின் அட்டைபடம் வழக்கம்போல் சர்ச்சைகளை கிளப்பிவிட தவறவில்லை!

ஒரிஜினல்

அட்டைகள் பளிச்சென்று இருக்கவேண்டும் என்று எடிட்டரும், பல வாசகர்களும் விரும்புவது உண்மைதான். அட்டைகளில் சில டிங்கரிங் வேலைகள் செய்வதில் தவறில்லைதான் - ஒரிஜினல் அட்டைப்படங்கள் எடுபடாதபோது மட்டும். ஆனால், இந்த இதழைப் பொறுத்தவரை கீழே தீட்டப்பட்டுள்ள இரத்தக்கறை பார்டர் மட்டுமே கண்ணை உறுத்துவதுபோல் உள்ளது என்பது என் கருத்து! சில சர்ச்சைகள் தொடரவேண்டுமென்று எடிட்டர் விஜயன் விரும்பியே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படுகிறதோ?! :D

2.   இந்த மாத இதழ்கள் மட்டுமல்ல, மேலும் பல லயன் நிறுவன வெளியீடுகள் eBay ல் விற்பனையாகிகொண்டிருக்கிறது! இதோ அதற்கான ஆன்லைன் முகவரி..
http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686

தீபாவளி ஸ்பெஷல் 2013 !



அவ்வளவுதான் நண்பர்களே! வருகைதந்த அனைவருக்கும் நன்றி! இத்தளம் குறித்த உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டங்களாக வெளிப்படுத்தினால் மகிழ்வேன்! மீண்டும் சந்திப்போம்!!!







Tuesday, 8 October 2013

குளுக்கோஸ் பட்டாளம் !

இந்த மாதமும் இரண்டு புத்தகங்கள். ரூபாய் 100 விலையில் ரத்தப்படலம் மற்றும் ரூபாய் 50 விலையில் ஆகாயத்தில் அட்டகாசம். ஒன்று சீரியஸ் ரகம் என்றால் மற்றொன்று காமடி பட்டாளம். இப்போதெல்லாம் இந்த ட்ரண்ட் நன்றாகவே இருக்கிறது. நான் முதலில் படித்தது “ஆகாயத்தில் அட்டகாசம்” கதையையே.

அட்டைப்படங்கள் குறைசொல்லமுடியாத அளவில் நன்றாகவே உள்ளது.

 காமிக்ஸ் டாட் காம் !




உள்நாட்டு போர் என்றால் கதைக்களங்கள் மிகவும் சீரியசாகத்தானே இருக்கவேண்டும்! ஆனால் இங்கே சூழ்நிலைகள் அப்படியே தலைகீழ். கேலிக்கூத்தாக்கி படிப்பவர்களை சிரிக்கவைத்திருக்கிறார்கள். வடக்கத்திய ராணுவப்பிரிவின் குதிரைப்படையின் சார்ஜெண்ட் ரூபி மற்றும் கார்பொரல் ஸ்கூபி இவர்கள்தான் இந்த கதையின் நாயகர்கள். மேலும் இக்கதையில் வரும் அனைத்து பாத்திரங்களுமே கோமாளிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அந்த கேப்டன் ஸ்டார்க், கர்னல் இவர்கள் அடிக்கும் லூட்டி வயிரை பதம் பார்ப்பவர்கள். இவர்கள் மட்டுமல்ல, அனைத்து கேரக்டர்களுமே நம்மை சிரிக்கவைக்கிறார்கள். அட்டகாசமான ஆர்ட்வொர்க், காமடிக்கு நூறு சதவிதம் கேரண்டி சொல்லவைக்கும் மொழிபெயர்ப்பு என்று இந்த இதழ் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இதுவரை வெளியான ஐம்பது ரூபாய் புத்தகங்கள் சோடைபோனதில்லை. அந்த வரிசையில் “ஆகாயத்தில் அட்டகாசம்” முதல் இடத்தை பிடித்திருக்கிறது!

ஒல்லிபிச்சான் லக்கி லூக் ஒன்மேன் ஆர்மி. அதனால் இவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் சிக்பில் & கோ விற்குதான் இந்த நீலச்சட்டை நாயகர்கள் பலத்த போட்டியை கொடுப்பார்கள் எனத்தோன்றுகிறது! 

மொத்தத்தில் இந்த ப்ளுகோட் பட்டாளம் தமிழ் காமிக்ஸ்க்கு கிடைத்த குளுக்கோஸ் பாட்டில்!

லக்கி லூக் தோன்றும் நான்கு பக்க சிறுகதை ஒரு போனஸ்!

ஆவலைத்தூண்டும் 2014 !





















காமிக்ஸ் மினி !



 1.  கடந்த ஞாயிறு காலை ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு திருக்கோவிலூர் செல்ல பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தேன். விடுமுறைதினம் என்பதால் அன்றைய நாளிதழ் தாமதமாகத்தான் வரும். அதேபோல் அன்று வந்த “தி இந்து”  நாளிதழை கிளம்பும் சமயத்தில் அவசர அவசரமாக புரட்டினேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! 11 ம் பக்கத்தில் நூல் வெளி பகுதியில் நமது காமிக்ஸ் அறிமுகம். சந்தோஷத்தில் முகநூலில் நன்பர்களுக்கு பதிவேற்றிவிட்டுதான் கிளம்பினேன். இதற்கு யார் உறுதுணையாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.

இதோ உங்கள் பார்வைக்கு.




2.  சூப்பர் பாஸ்ட் பதிவர் நன்பர் சவுந்தர் அவர்களின் இந்த மாத மற்றொரு இதழான “ரத்தப்படலம்” பதிவுக்கு இங்கே செல்லுங்கள்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/106-xiii-ratha-padalam-lion-new-release.html

3.   காமிக்ஸ் வட்டார ஜாம்பாவான்கள் சமிபத்தில் சந்தித்துக்கொண்ட இருட்டுக்கடை அல்வாவும் ஒரு திடீர் சந்திப்பும் - படித்து இன்புருங்கள்!
http://www.bladepedia.com/2013/10/Rajapalayam-Travelogue-2013.html

4.  சமிபத்தில் ஆங்கில நாளிதழான “Deccan Chronicle"  ல் வந்த ஒரு ஆர்ட்டிகல் அனைவரும் அறிந்ததே. நன்பர் விஷ்வா தனது வலைப்பூவில் பதிவேற்றியுள்ளார்.  

5. நன்பர் ராஜ் முத்துகுமார் அவர்களின் தனது பானியில், கடந்த மாத இதழ்களின் விமர்சணங்கள்! 
http://www.comicsda.com/2013/09/vs-makiling-fortress-hour-of-tiger.html

அவ்வளவுதான் நன்பர்களே. வருகைதந்த அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம்!


Tuesday, 29 January 2013

005 பார்த்தது ! கேட்டது ! படித்தது !

என்னடா பொழப்பு இது, யாராருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கு. வர வர எட்டு, ஒன்பது மணிநேரம் ஆபீஸ்ல ஓடறதே பெரும்பாடா இருக்கே. கருமம் எந்தநேரத்தில பொறந்துதொலச்சமோ - இப்படிதான் சமிபகாலமாக அடிக்கடி மனதில் ஒரு வெறுப்பாக தோன்றுகிறது. சரி ஏதாவது பிஸினெஸ் பண்ணலாம் என்று யோசித்தால் பேங்க் கடன்கள் தொலச்சுபுடுவேன் என்று பயமுறுத்துகிறது. இப்படிதான் அலுவலகத்தில் ஒருநாள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பழைய நண்பர் ஒருவர் நீண்டநாள் கழித்து என்னை பார்க்கவந்தார். "என்னங்க வேலையெல்லாம் எப்படி போகுது "    என்று ஒரேஒரு கேள்விதான் கேட்டேன். "அட நீங்க வேற, ஏண்டா பொறந்தோம்னு இருக்கு. ஆபீஸ்ல கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்கு. காரியம் முடியிறவரைக்கும் மேனேஜ்மென்ட் இனிக்க இனிக்க பேசறாங்க. வேலை முடிஞ்சவிடனே அவங்க சுயரூபத்தை காமிக்கிறாங்க. யாருக்கும் நன்றி என்பதே கிடையாதுங்க. கூட வேல பாக்கும் ஊழியரே முன்னாடி சிரிச்சி பேசிட்டு, பின்னாடிபோய் போட்டுகொடுக்கிறாங்க. யாரை நம்புவதென்றே தெரியிலைங்க.  இந்த ஐ டி கம்பனில வேலை பார்கிரவங்களை பாருங்க. ஜாலியா எந்த தொல்லையுமில்லாம வேலைசெய்யறாங்க. நான் பொறந்த நேரம் இப்படி ஒரு கம்பனில வேலை செய்யனும்னு தலையில எழுதியிருக்கு". என்று பொரிந்து தள்ளிவிட்டார். 

"அட என்னடா தொல்ல, கொடும கொடுமன்னு கோவிலுக்குப்போனா அங்கொரு கொடும அவுத்து போட்டு ஆடுதே " என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அப்போது ஒரு பையன் வேலைகேட்டு உள்ளே வந்தான். அவன் பயோ டேட்டா வாங்கிப்பார்த்தேன். BE மெக்கானிகல், 65% மார்க். "எந்தவேலையா இருந்தாலும் கொடுங்க சார் செய்யறேன். மெஷின் ஆபரேட்டராகூட வேலைசெய்ய ரெடி சார். சம்பளம் கம்மியா இருந்தாகூட பரவாயில்ல சார்" என்றான் பரிதாபமாக. சரிப்பா எங்க GM கேட்டுட்டு கால் பண்றேன், என்று சொல்லியனுப்பினேன். அவன் போனபிறகு நானும் நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம் அமைதியாக. பிறகு நண்பரை என் பைக் இல் அழைத்துசென்று பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு சென்றேன். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு லோக்கல் டிவியில், யாரோ ஒரு பெரியவர், 'கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழ்வதெப்படி' என்று திருக்குறள் எல்லாம் மேற்கோள் காட்டி ரொம்ப சீரிசாக பேசிக்கொண்டிருந்தார். 

***********************************************************************************

உலகில் மனிதன் தோன்றிய நாள்முதல் ஆணாதிக்கமும், பாலியல் தொல்லைகளும் தோன்றியிருக்கிறது. ஆனால் இந்த நாகரிக உலகில், அதுவும் சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக சொல்கிறார்கள். ஓகே செய்தி இதுவல்ல. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஒரு ஆசிரியர் லவ் லெட்டெர் எழுதிய செய்தியை தினசரியில் படிக்க நேர்ந்தது. நாகை மாவட்டம் ஒரு பள்ளியில் ஒரு மாணவிக்கு 'NAAN UNNAI KAATHALIKKIREN' என்று 'ஆங்கிலத்தில்' எழுதி கொடுத்திருக்கிறார். அந்த புள்ளைக்கு ஒன்னும்புரியாம, அந்த லெட்டரை வகுப்பு ஆசிரியரிடம் காண்பிக்க, அவங்க தலைமை ஆசிரியரிடம் காண்பிக்க, இப்போ லெட்டர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட் ஆர்டரோடு வீட்ல அவமானத்தோடு இருக்கிறார். இந்த செய்தியில் நிறைய சந்தேகங்கள் வந்தாலும், அந்த வாத்தியாருக்கு இதெல்லாம் தேவையா என்று பரிதாபப்படத்தோனுகிறது.

***********************************************************************************

 விஸ்வரூபம் - ஒருவாரமாக செய்திதாள்களிலும், சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக தீனிபோட்டுக்கொண்டிருக்கிறது. விவாதம் செய்கிறோம் என்றபேரில் செய்திச் சேனல்கள் 8 மணி நேரங்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. நம்ம படம் வசூலில் கலக்குதோ இல்லையோ, இப்படி பரபரப்பாக செய்திகளில் அடிபடும் - என்று கமலே எதிர்பார்த்திருக்கமாட்டார்.  படத்தை ஒழுங்காக ரிலீஸ் பன்னவிட்டுயிருந்தால் இருபது நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கியிருக்கும் என்று படம் பார்த்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.  பிரச்னை எங்கேயோ ஆரம்பித்து, இப்போது எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. ஜெயா அரசு 144 தடையுத்தரவு போடுமளவுக்கெல்லாம் போனது ரொம்ப ஓவராக தெரிகிறது. விஸ்வரூபம் இப்போது தமிழ்நாடு அரசுக்கு பிரஸ்டிஜ் பிராபலத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அரசு தடை உத்தரவு பிறப்பித்த உடனே, கமல் முதல்வரை சந்தித்து பேசியிருந்தால் ஒருவேளை பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கலாம். இப்போதே படத்தின் DVD கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். ம்ம்ம் வெரன்னசொல்ல, கமலுக்கு நேரம் சரியில்லை.  பிரச்னை பொதுமக்களுக்கு இடையூறாக திரும்பாமல் இருந்தால் சரி.

***********************************************************************************

Saturday, 26 January 2013

004 எனது பார்வையில் NBS - லார்கோவும் எனது பங்கு முதலீடும் !

2000 ம் ஆண்டு - கனரா பேங்க் தன் விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.10/- முகமதிப்புக்கொண்ட பங்குகளை (Shares) பொதுமக்களுக்கு வெளியீட்டு பணத்தேவையை பூர்த்திசெய்துகொண்டது. அப்போது  மாதக்கடைசி என்பதால் நான் Salary ப்ரிபரெஷன் வேளையில் பிசியாக இருந்தேன். பங்குகளை வாங்க கடைசி நாள் என்பதால், நடுவில் கிடைத்த ஒரு மணிநேரத்தில் கனரா பேங்க் சென்று கையில் இருந்த பணத்தில் 400 பங்குகளை வாங்கிபோட்டேன். என் வாழ்நாளில் சேமிப்பு என்று செய்த முதல் நல்லகாரியம் இதுதான்.   ஷேர் வாங்கவேண்டும் என்று என் மனதில் தோன்றக்காரணம் நான் படித்த சப்ஜெக்ட் அப்படி. அதன் பிறகு அதை நான் மறந்தும்போனேன். ஆனால் நான் இன்வெஸ்ட் பண்ண 14000 ரூபாய்க்கு வருடம்தோறும் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தவறாமல் டிவிடெண்ட் வந்துகொண்டிருந்தது.

2007 ம் ஆண்டு - நான் புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தபோது, நடுவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது என் ஷேர்கள் ஞாபகம் வந்தது. பங்குகளை விற்கவேண்டுமென்றால் Demat கணக்கு இருக்கவேண்டும். எனவே நானும் என் நண்பன் ஒருவனும் ICICI பேங்க் ல் ஆளுக்கொரு Demat Trading அக்கௌன்ட் ஆரம்பித்தோம். அந்தசமயம் இந்தியன் ஷேர் மார்க்கெட் நன்றாக இருந்தது. அப்போது கனரா பேங்க் ஷேர் ஒன்று ரூ. 350/- க்குமேல் போனது. உடனே நான் என்னுடைய ஷேர்களை ட்ரேடிங் அக்கௌன்ட் க்கு மாற்றி என் 400 ஷேர்களையும், ஒரு ஷேர் ரூ.342/- க்கு விற்பனை செய்தேன். அன்றிலிருந்து இன்றுவரை icicidirect.com ல் ஆன்லைன் ட்ரேடிங் செய்துகொண்டிருக்கிறேன். பங்குச்சந்தை மற்றும் இந்திய நிறுவனங்களை பற்றியும் நிறைய தெரிந்துகொண்டேன். என் அக்கௌண்டில் 15 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சிறிய அளவில் இருக்கின்றன. 


இவன் சுயபுராணங்களை யார் கேட்டது, என்று நீங்கள் எரிச்சலாவது புரியுது. ஓகே விஷயத்திற்கு வருகிறேன். சமிபத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த முத்து காமிக்ஸ் 40 வது ஆண்டுமலர் நெவர் பிபோர் ஸ்பெஷல் புத்தகத்தில் முதல் மற்றும் இரண்டாவது கதையான, லார்கோ வின்ச் சாகசம் - கான்கிரீட் கானகம் மற்றும் சுறாவோடு சடுகுடு படித்தபோது சந்தோஷமாகவும், என் ஷேர் மார்க்கெட் அனுபவங்களை அசைபோட காரணமாக அமைந்தது.


இந்த இரண்டு கதைகளில் கம்பெனி இணைப்பு, ஷேர்கள், போர்டு மீட்டிங் என்று பக்கத்துக்கு பக்கம் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததை நான் மிகவும் ரசித்தேன். லார்கோவின் முதல் இரண்டு பாகங்களைவிட இதில் ஆக்க்ஷன் குறைவுதான் என்றாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இதற்கு மொழிபெயர்ப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தகதைகளில் மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதை உணரலாம். அதிலும் அந்த முதிர் அழகி லிஸ்ஸா லூ கேரக்டர் ரொம்பவே அலாதியானது.



இந்தக்கதைத் தொடரில் எனக்கு மிகவும் கவர்ந்த ஒன்று மொழிபெயர்ப்பு. முதல் இரண்டு பாகங்களைவிட இதன் தமிழ் பொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



லார்கோ தொடரின் ஒரிஜினலை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதையும் இந்த தமிழ் வடிவையும் ஒப்பீடு  செய்யவிரும்பவில்லை. ஆனால் தமிழில் படிப்பதே எனக்கு முழு நிறைவை தருகிறது.
 
Never Before Special இப்போது ebay இல் கிடைக்கிறது. அதற்கான ஆன்லைன் முகவரி http://www.ebay.in/itm/Muthu-Comics-NEVER-BEFORE-SPECIAL-/221176884780?pt=IN_Books_Magazines&hash=item337f2b6e2c


NBS வெளியான ஜனவரி 11 எனக்கு ஒரு மறக்கமுடியா நாள். அன்றுதான் முகமறியா காமிக்ஸ் வாசக பிரபலங்களை சந்தித்த மறக்கமுடியாத நாள்.
 










ஓகே நண்பர்களே மீண்டும் விரைவில் சந்திப்போம். நன்றி.





Sunday, 13 January 2013

003 NEVER BEFORE நேரங்கள் !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

               உண்மையில் காமிக்ஸ்க்காக அதிகமாக நேரங்கள் நான் ஒதிக்கியதில்லை. கடைகளில் பார்த்தால் வாங்கிப்படிப்பதோடு சரி. முதல்முறையாக லயன் காமிக்ஸ்க்காக சந்தா செலுத்தியதே கடந்த ஆண்டுதான். ஆனால் இப்போது நிறைய நண்பர்களை இந்த காமிக்ஸ் சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அதன் விளைவாக நண்பர்களுடன் NBS வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்தது என்வாழ்க்கையில் மறக்கமுடியா தருணங்கள்.

            
முதல் முறையாக முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன், எடிட்டர் விஜயன் மற்றும் விஜயன் அவர்களின் மகன் ஆகியோரை சந்தித்தது, என் வாழ்வின் சந்தோஷமான நாள். காமிக்ஸ் நண்பர்கள் பலரை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.






நன்றி NBS!




 எங்கள் சந்தோஷ பயணத்தை  நண்பர் "முதலைபட்டாலம்" கலீல் அவர்கள் அழகாக தொகுத்து பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் பல.


"அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"



"HAPPY PONGAL"


வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்.