Tuesday, 5 August 2014

குத்து...மொத்து... முருக்...மிடுக் “டெக்ஸ்” !

சட்டம் அறிந்திரா சமவெளி !வில்லனின் கைக்கூலி பில் கார்மேனை சந்திக்கும் ஆரம்பகட்டம்...

கார்ஸன் : சாருக்கு கோபம் வரும் முன்பாக உனக்கு தெரிந்த சங்கதியெல்லாம் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்து தொலைத்து விடு. அவருக்கு கோபம் வந்துவிட்டால் உதை வாங்கும் உன்பாடு மட்டுமல்ல தூக்கிவிடும் என்பாடும் திண்டாட்டம்தான்!

அப்போது குத்துவிட ஆரம்பிப்பவர் கதை முடியும்வரை அவருடைய முஷ்டி பிஸியாகவே இருக்கிறது!

ஓசை படாமல் பின்வாசல் வழியாக வில்லன் மோரிஸனை அவன் கோட்டைக்கே சென்று சந்திக்கும் நேரம்... 

டெக்ஸ் : கதவை நீ தட்டுகிறாயா?
கார்ஸன் : அந்த கௌரவத்தை உனக்கே விட்டுக்கொடுக்கிறேன் நண்பா.
டெக்ஸ் : என்னுடைய வழி தனி வழி!

டெக்ஸ் காலால் ஒரு எத்துவிட கதவு படீர்....

யெஸ்... ஒரு பெரிய கஞ்சி தொட்டிக்குள் முக்கி எடுத்து காயவைத்தது போல்தான் இந்த கதைமுழுவதும் படு விறைப்பாக திரிகிறார் டெக்ஸ் வில்லர்! இது ஒரு 227 பக்க  அக்மார்க் பற பற, சுரு சுரு கதை. டெக்ஸின் துப்பாக்கியை விட அவருடைய கைதான் பெரும்பாலும் பெசுகிறது! 

இந்த கதையில் கார்ஸன், கிட், செவ்விந்தியன் என்று டெக்ஸ் டீம் அனைவருமே இருக்கிறார்கள். ஆம் இருக்கிறார்கள். ஆனால் கதை நெடுகிலும் டெக்ஸ் மட்டுமே ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்! 

கதை என்னவோ மிகச்சாதாரண கதைதான். ஒரு சட்டவிரோத கும்பலிடமிருந்து ஒரு நகரை மீட்டெடுக்கும் பழைய பார்முலா கதைதான். ஏற்கனவே பல டெக்ஸ் கதைகளில் நாம் படித்தவைகள்தான். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய டெக்ஸின் அதிரடி அதகளம் வாசிப்போரை அசரடிக்கிறது.

” இந்தக் கதையில் நான் பணி செய்த நாட்கள் முழுவதுக்கும் ஒரு சண்டியரைப் போலவே விறைப்பாகச் சுற்றித் திரிந்தேன் என்றே சொல்லலாம் ! 'ஏன் ?' என்றால் உதை '; எதற்கென்றால் குத்து ! 'ஐயோ என்றால் மொத்து ! 'என்பது தான் இக்கதையின் முழுமைக்கும் டெக்சின் தாரக மந்திரம் ! மனுஷன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டை போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகசமோ - என்னவோ - ஓங்கிய முஷ்டியானது 224 பக்கங்களுக்கும் இறங்கிய பாட்டைக் காணோம் ! எழுதி முடித்த போது விரல்கள் வலித்ததை விட, வில்லன்கள் வாங்கிய உதைகளை கிட்டே இருந்து பார்த்தது போல் என் தாடை தான் வலித்தது ! ஆக்ஷன் ருத்ரதாண்டவம் தான் ! “  

இதை ‘சட்டம் அறிந்திரா சமவெளி’ தயாரிப்பில் இருந்தபோது எடிட்டர் விஜயன் அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டதுதான்.  அவரது வார்த்தைகள் எதுவும் மிகையில்லை என்பது இக்கதையை படித்த அனைவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். ஒரு இரண்டு நாட்களாவது விரைப்பாக திரிந்திருப்பார்கள்! 

என்னைக் கவர்ந்த பிற விஷயங்கள் :

கதை நெடுகிலும் கார்ஸனின் நகைச்சுவை வசணங்களும், அதற்கு வழக்கம்போல் தன் நண்பனை வெறுப்பேற்றும் வகையில் டெக்ஸ் தரும் பதில்களும். அதிலும் நால்வரும் மாறுவேடமிட்டு கோச் வண்டியில் பயனிக்கும்போது அவர்கள் அடிக்கும் லூட்டிகள் லக்கி லூக்கையே மிஞ்சுகிறார்கள் என்றால் மிகையில்லை!

டெக்ஸ் வில்லர் கதையை முழுவதும் கலரில் படிப்பது முழு மனநிறைவைத் தருகிறது!

‘நிஷ்டூரம்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல், சரளமான எளிய தமிழ் வார்த்தைகளைக்கொண்டு மொழிபெயர்த்திருப்பது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது!

இக்கதையில் குறை என்று சொன்னால் அவ்வளவாக திருப்தி தராத க்ளைமாக்ஸ் மட்டுமே என்பது எனது கருத்து!

கடந்த 2ம் தேதி வெளியான லயன் 30வது ஆண்டு மலர்,  தி லயன் மாக்னம் ஸ்பெஷல் இதழில் பிரதான கதையாக வந்து அனைவரின் வரவேற்பையும் அள்ளியிருக்கிறது இந்த டெக்ஸ் வில்லர் ருத்ரதாண்டவமாடும் “சட்டம் அறிந்திரா சமவெளி” ! இக்கதையை தேர்வு செய்த எடிட்டருக்கு நன்றி!!

மொத்தத்தில் இந்த “சட்டம் அறிந்திரா சமவெளி” காமிக்ஸ் வாசகர்களை குதூகலப்படுத்தும் அதகளம் !     

Saturday, 2 August 2014

THE லயன் MAGNUM ஸ்பெஷல் - ஃபர்ஸ்ட் லுக் !

The Lion Magnum Special :

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “லயன் காமிக்ஸ் 30வது ஆண்டு மலர் - தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” கம்பீரமாக ஈரோடு புத்தகத் திருவிழாவில்  வெளியாகிவிட்டது. லயன் - முத்து பிரத்யேக ஸ்டாலில் பரபரப்பாக விற்பனையாவதாக நண்பர்கள் மூலம் வந்த செய்திகள் தெறிவிக்கின்றன! புதுவையிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் எங்கள் ப்ளான் கடைசி நேரத்தில் பனால் ஆனது எனக்கு மிகுந்த வருத்தமே!  


பேக்கிங் :


ஒரே வார்த்தை, அசத்தல்! ரொம்பவே மெனக்கெட்டு, எந்த குறையும் சொல்லமுடியாத வகையில், சூப்பரான அட்டைப் பெட்டியில் இரண்டு வெவேறான சைஸ் புத்தகங்கள் கொஞ்சமும் டேமேஜாக வழியே இல்லாமல் மிக கவனமாகஅதேசமயம் நல்ல தரமாக பேக் பண்ணி வந்துள்ளது பாராட்டும்படி உள்ளது! இதற்கே நிறைய நேரம் விழுங்கியிருக்கும்!  எனக்கு வந்த புத்தகங்களின் பேக்கிங்கை பாருங்களேன்......
அட்டைபடங்கள் : 

LMS - புக் நெ . 1 :


பேக்கிங்கை பிரித்து புத்தகத்தை கையில் எடுக்கும்போதே வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அட்டகாசமான திக்கான அட்டைகள் (Hard Bound). காமிக்ஸ் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய முழு திருப்தி அளிக்கிறது. முன் அட்டையில் டெக்ஸ் கம்பீரமாக காட்சியளிக்க, பின் அட்டையும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அட்டைப் படங்கள் மிதமான ஜிகினா வேலைப்பாடுகள் சூப்பர்!    LMS - புக் நெ. 2 :


மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம், வழக்கமான பெரிய சைஸில் நார்மலான அட்டைகளுடன் வெளிவந்துள்ளது. முன் அட்டையில் டைகர் சோலோவாக கம்பீரமாக போஸ் கொடுக்கிறார். பின் அட்டையில் லக்கி மற்றும் ரின் டின் கேன் என்று பல வண்ணங்களில் கவற்கிறது. ஆனால் முதல் புத்தகத்தை போலவே இதற்கும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். 

பேப்பர் குவாலிட்டி - கலர் & கருப்பு-வெள்ளை பக்கங்கள் :

மேக்னம் ஸ்பெஷல் முதல் புத்தகம் மொத்தம் 770 பக்கங்கள். அதில் 426 வண்ணப் பக்கங்கள். டெக்ஸ் 227 பக்கங்களில் கலரில் அதிரடி செய்கிறார். குறை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கலர் பக்கங்கள் கலக்கலாக உள்ளது. கருப்பு வெள்ளை பக்கங்களை பொறுத்தவரை “கம் பேக் ஸ்பெஷல்” புத்தகத்தில் பயண்படுத்திய தாள்களின் தரத்தில் கவர்கிறது. இந்த முதல் புத்தகத்தில் என்னை மிகவும் கர்ந்தது பைண்டிங் சர்வதேச தரத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதே! 

மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம் மொத்தம் 136 பக்கங்கள். அட்டை டு அட்டை பெரிய சைஸில்  கலரில் அசத்துகிறது. 

இந்த “லயன் 30வது ஆண்டு மலர்” 900 பக்கங்களுக்கு மேல் ஒன்பது வெவ்வேறான ரசனையுடன் கூடிய கதைகளுடன் அனைத்து தரப்பு காமிக்ஸ் ரசிகர்களையும் கவரும் வகையில் வெளிவந்து பிரமிக்கச் செய்கிறது!!


மொத்தத்தில் “The லயன் Magnum ஸ்பெஷல்”  -  தாறுமாறு!!
 


நண்பர் சவுந்தர் தனது வழக்கமான ஸ்டைலில் LMS பற்றிய சிறப்பு பதிவில் நம் கண்ணுக்கு விருந்தளித்துள்ளார். பின்வரும் முகவரியில் சென்று ரசியுங்கள்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2014/08/125-lion-magnum-special.html


ஓகே நண்பர்களே, இதோ என் அபிமான ஹீரோ டெக்ஸ் வில்லர் குழுவினர்களுடன் சமவெளிகளிலும், பாலைவனங்களிலும், செவ்விந்தியர்களுடனும் பயனிக்க ஆயத்தமாகிவிட்டேன்! Bye. 


Wednesday, 23 July 2014

ஆகஸ்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா !

இன்னும் பத்தே நாட்கள்! காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், சந்தோஷமான ஆர்ப்பரிப்பும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவில்லாமல் இருக்கும். இதற்கு காரணமாக இருக்கப்போவது  “லயன் காமிக்ஸ் 30 வது ஆண்டு மலர்” வெளியாகும் நாள் ஆகஸ்ட் 2 ம் தேதி! 

ஒரு பதிப்பகம்,  அதிலும் காமிக்ஸ் கதைகள் வெளியிடும் ஒரு நிறுவனம், தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக புத்தகங்களை வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. சில ஆயிரங்களில் குறுகிப்போன வாசகர்களுக்காகவே தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் காமிக்ஸ் காதலர் எடிட்டர் விஜயன் அவர்களுக்கும், அவர் நிர்வகிக்கும் பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்திற்கும்  இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.

1984 முதல் 2014 ஆகஸ்ட் வரை லயன் காமிக்ஸ் வெளியீடுகளின் பட்டியல் (நன்றி : எடிட்டர் விஜயன் வலைப்பூ)


The லயன் MAGNUM ஸ்பெஷல் !

முப்பது ஆண்டுகளில் இதுபோல் ஒரு காமிக்ஸ் இதழ் வந்ததில்லை என்று பிரமிக்கும் வகையில் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ள “தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” புத்தகத்தில் இடம்பெறவுள்ள கதைகளின் விபரங்கள் கீழே.....
இதனை தொடர்ந்து எடிட்டர் விஜயன் தன்னுடைய பிளாகில் வெளியிட்ட கதைகளின் ட்ரைலர்களில் சில.....

 டெக்ஸ் வில்லரின் “சட்டம் அறிந்திரா சமவெளி” !


 

C.I.D ராபின் துப்பறியும் “நிழல்களின் நினைவுகள்” !


 

திகில் டிடெக்டிவ் டைலன் அறிமுகமாகும் “அந்தி மண்டலம்” !

 


தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” அனைத்து தரப்பு ரசிகர்களையும் நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் என நம்பலாம்!

அதே சமயம் இந்த ஸ்பெஷல் இதழ் வெளிவரும் முன்பே சில சர்ச்சைகளையும் ஏற்படுத்த தவறவில்லை.

இதழின் தயாரிப்பு மற்றும் குறைந்த அளவு முன்பதிவுகள் பற்றிய எடிட்டரின் "வரவு எட்டணா..செலவு பத்தணா” என்ற பதிவும், அதனை தொடர்ந்து வாசகர்களின்  பின்னூட்டங்களும் ரொம்பவே சுவராஸ்யமானது! 

”நான் 10 புத்தகங்கள் வாங்குவேன், 20 புத்தகங்கள் வாங்குவேன்” என்றெல்லாம் சொல்லப்போவதில்லை! ஆனால், எனது இந்த தளமும், பதிவும் காமிக்ஸ் ஆர்வம் இல்லாத ஒருவரையாவது இந்த 30வது ஆண்டு மலரை வாங்கத் தூண்டுமேயானால் காமிக்ஸ் ரசிகனான எனக்கு அளவில்லா சந்தோஷமே!! 

"The லயன் MAGNUM ஸ்பெஷல்” இதழுக்கான  ஆன்லைன் புக்கிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது! http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36 என்ற முகவரிக்கு சென்று இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்! ஆகஸ்ட் 2 ம் தேதியிலிருந்து “ஈரோடு புத்தக திருவிழா”விலும் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்.    Friday, 11 July 2014

விரியனின் விரோதி !

மனிதனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிக்கொண்டேதான் இருக்கிறான். சூழ்நிலைகளை பொறுத்து தன் போராட்டங்களை அமைத்துக் கொள்கிறான். அதனடிப்படையிலேயே அவரவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்தே வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் அமைகிறது! 


இப்படித்தான் தானுண்டு தன் தச்சு வேலையுண்டு என்று அமைதியாக பெர்லினில் கழித்துக்கொண்டிருக்கும்  வேபர், அதையே அவன் கடைசிவரை கடைபிடித்துக் கொண்டிருக்க சூழ்நிலை அனுமதித்திருந்தால் அவன் வாழ்க்கை திசைமாறியிருந்திருக்காது. அவன் எடுத்த இரண்டு தவறான முடிவுகளால், அவன் மட்டுமல்ல, அவன் வளர்ப்பு மகனான ஷ்ரைனெர் வாழ்க்கயையும் புரட்டிப்போடுகிறது. அதிலும் உள்நாட்டுப் போரினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த 1940 களில்,  தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில்  தொழில்முறை கொலையாளியான, மர்மவாழ்க்கை வாழும் ஹான்ஸ் என்பவனை  தன் பாதுகாப்புக்கு நியமித்துக்கொள்ளும் தன் முதல் தவறை செய்கிறான் வேபர். அவனால் நிகழும் மூன்று ரஷ்ய போர்வீரர்களின் மரணம் வேபர் மற்றும் அவனின் வளர்ப்பு மகனின் வாழ்க்கையை திசைமாற்றும் முதல் நிகழ்வாகிப்போகிறது. அதன் பிறகு எப்படியோ 300 டாலர்களை சேமித்து, அதை ஷ்ரைனெரின் கைகளில் திணித்து சிகாகோ அனுப்பும் வரைகூட பெரிய பிரச்சனை நேரிடவில்லைதான். சிகாகோவில் நேர்மையான நல்வாழ்வு வாழவே ஷ்ரைனெர் விரும்புகிறான். ஆனால் விதியும் சமூகச்சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது பரிதாபமே.  இதற்கிடையே, அந்த 300 டாலர்கள் மூன்று ரஷ்யர்களின் கொலைக்கு காரணமான துப்பாக்கியை விற்று வந்த பணமே என்ற உண்மை தெறியவருகிறது. இதுவே வேபர் செய்த  இரண்டாவது மிகப்பெரிய தவறாகிப்போகிறது. இதனால் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும் தன் வளர்ப்பு தந்தையை காப்பாற்றும் பொறுப்பு ஷ்ரைனெருக்கு. அதற்கு தேவை பணம்! அப்போதுதான் ஷ்ரைனெர் தடம் மாறுகிறான். விபரித முடிவுக்கும் வருகிறான். அப்போதுதான் நேர்மையான வாழ்வுக்கு திரும்பியிருக்கும் ஹான்ஸின் மனதை மாற்றி தொழிலை கற்றுக்கொண்டு நாம் எதிர்பார்க்காத மிக பயங்கரமான தொழில்முறை  கொலையாளியாகிறான் ஷ்ரைனெர். புலி வால் பிடித்தக் கதையாக அதுவே அவன் வாழ்வில் இரண்டர கலந்துவிடுகிறது.

சமீபத்தில் இப்படி ஒரு வீரியம் மிக்க காமிக்ஸ் கதையை நான் படித்ததில்லை. ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படத்துக்கு இணையாக ஒவ்வொரு பக்கமும்  பரபரக்கிறது. அதிலும் ஹான்ஸ் ஷ்ரைனெருக்கு கொடுக்கும் பயிற்சிகள், வாடிக்கையாளர்களை சந்திக்கும் யுக்தி என கதாசிரியரும், ஓவியரும் கலந்துகட்டி மிரட்டியிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.

எங்கே மீண்டும் தவறான பாதைக்கு திரும்பி விடுவோமோ என்ற பயத்தில் ஹான்ஸ் தன் உள்ளங்கையில் தானே சுட்டுக்கொண்டு ஊனமாக்கி கொள்வதும், தன் வளர்ப்பு மகனின் தவறான பாதைக்கு காரணமாகி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் வேபருக்கு ஏற்படும் இறுதி முடிவும் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.  

கால ஓட்டத்தில் ஷ்ரைனெரின் தோற்ற மாற்றங்களில் ஓவியரின் பிரமிக்க வைக்கும் திறமை
 ஏற்கனவே 18 பாகங்களாக வெளிவந்து மிக மிரமாண்டமான வெற்றி பெற்ற இரத்தப்படலம் தொடரின் ஒரு நெகட்டிவ் பாத்திரத்தின் முன்கதையாக இப்போது வந்துள்ளதுதான் இந்த விரியனின் விரோதி. இக்கதையின் ஹீரோ ஷ்ரைனெர் எனும் மங்கூஸ் பாத்திரத்தை இரத்தப்படலம் கதையுடன் அழகாக இணைத்த கதாசிரியரின் திறமை பாராட்டும்படி இருக்கிறது. இக்கதையின் தமிழாக்கம் இந்த ஆண்டு  இதுவரை வெளிவந்தவைகளுள் மொழிபெயர்ப்பில் இதுதான் பெஸ்ட் என்பேன். 


          
இக்கதையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவைகளை பெரிதுபடுத்தும் அளவுக்கு அவசியமில்லை என்பதே என் கருத்து. 

மொத்தத்தில் இவன் வேற மாதிரி இந்த விரியனின் விரோதி !

லயன், முத்து காமிக்ஸ்களை வெளியிடும் பிரகாஷ் பப்ளிஷர்சின் ஜூலை மாத வெளியீடான விரியனின் விரோதி ஆன்லைனில் http://lioncomics.worldmart.in/index.php?categoryID=16 என்ற முகவரியில் கிடைக்கிறது!

Saturday, 11 January 2014

காமிக்ஸ் பொங்கல்!

தல-தளபதி என்று இந்த வருடப் பொங்கல் பட்டையை கிளப்பிகொண்டிருக்க, நமக்கும் அதற்கு ஈடாக காமிக்ஸ் ரிலிஸ் என்று சந்தோஷப் பொங்கலாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை! 2013 ல் 400 ரூபாய் NBS பிரமிப்பு என்றால், இந்தவருடம் நான்கு புத்தகங்களின் பிரமிப்பு! 

இதோ கை நிறைய காமிக்ஸ்! :)

  

இதில் நான் உடனே படித்தது “யுத்தம் உண்டு... எதிரி இல்லை...” புத்தகமே! இந்த இதழைபற்றிய எனது சிறு விமர்சனப் பதிவே இது!


எடிட்டரின் ‘ஹாட் லைன்’ பக்கங்கள்!


கதை!


 கமான்சே எனும் பெண்ணுக்கு சொந்தமான ஒரு நொடிந்துபோன பண்ணையில் வேலை (உதவி) செய்பவர்தான் கதையின் நாயகன் ரெட் டஸ்ட். இவருக்கு கீழே மூன்று சோப்ளாங்கி உதவியாளர்கள்! இவர்களுக்கு ’பல்கா’ ஆர்டர் ஒன்று கிடைக்கிறது! அதாவது, ரயில் பாதை அமைக்கும் பணியாளர்களுக்கு மாட்டிறைச்சி சப்ளை பன்னுவதே அந்த ஒப்பந்தம்! ஆர்டரை நிறைவேற்றும் சமயம், செயன்னீக்கள் (செவ்விந்தியர்கள்) வெள்ளையர்களுடன் தாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, அவர்களுக்கு தரவேண்டிய உணவு வராததால், அதனால் கோபமுற்று, கமான்சேயின் பண்ணையை தாக்கி, அவர்களின் மாடுகளை கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தங்கள் மாடுகளை மீட்டுவரும் நோக்கத்தில் செயன்னீயர்களின் குடியிருப்புக்கு செல்கிறார்கள் ரெட்டும், கமான்சேவும். செயன்னீக்களின் உணவு பிரச்சனையை தீர்ப்பதாக, ரெட் அவர்களிடம் மூன்று நாட்கள் அவகாசம் கேட்கிறார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கமான்சேவை பினையாக வைத்துக்கொண்டு அதற்கு சம்மதிக்கிறார்கள்.

மூன்று தினங்களில் ரெட் பிரச்சனையை தீர்க்கிறாரா? செயன்னீக்களிடம் கைதியாக இருக்கும் காமான்சேவின் நிலை என்னானது?  உணவுக்காக காத்திருக்கும் ரயில் பணியாளர்களின் முடிவு என்ன? என்பதை மீதி வண்ணப்பக்கங்களில் கண்டு, படித்து மகிழுங்கள்! 

 

 

நிறைகள்!

  • 60 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! 
  • கையில் பிடித்து படிப்பதற்க்கு வசதியாகவும் இருக்கிறது! 
  • அனைவரையும் கவரும் அட்டகாசமான, தெளிவான ஆர்ட்வொர்க்!
  • இக்கதையுடன் பக்க நிரப்பியாக வந்துள்ள லக்கி லுக்கின் சிறுகதை  ”ஒரு இரயில் பயணம்” உண்மையிலேயே சூப்பர்! 

குறைகள்!

  • கதை-எந்த அதிரடி திருப்பமும் இல்லாமல், ஏதோ டாகுமெண்டரி போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?!
  • சவசவ என முடியும் கதையின் கிளைமாக்ஸ்!
  • உள் பக்கங்களில் சில பக்கங்கள் பளிச்சென்றும், அதே சமயம் சில பக்கங்கள்  டல்லாகவும் இருக்கிறது!
  • புத்தகம் 60 பக்கங்கள் மட்டுமே என்பதால், முப்பது நிமிடங்களில் படிப்பதற்கு போதுமானதாக தோன்றுவது ஒரு பெரிய குறையாகத் தெரிகிறது!

காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  கடந்த ஆண்டு நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது! ஆனால், இந்த முறை கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமே! அந்த குறையை நண்பர் விஷ்வா அவர்களின் புத்தக கண்காட்சி அப்டேட் பதிவுகள் தீர்த்துவைப்பது சந்தோஷமாக உள்ளது!


2.   நண்பர் ‘முதலைப்பட்டாளம்’ கலீல் அவர்கள் தொடர்ந்து பதிவுகள் இட்டு வருவது மிகவும் சந்தோஷத்தை தருகிறது! இதோ அவரின் பொங்கல் புத்தகங்களின் பதிவு ஒன்று!3.    அதிரடி பதிவர் நண்பர் ஜானி அவர்கள் புத்தாண்டு பரிசாக ராணி காமிக்ஸில் வெளிவந்த ஒரு கதையை முழுவதும் அழகாக ஸ்கேன் செய்து போட்டுள்ளார்! அவருக்கு என் நன்றி!

http://johny-johnsimon.blogspot.in/2014/01/blog-post.html

4.   நண்பர் பரனிதரன் அவர்களின் இந்த மாத இதழ்களின் அழகான விமர்சணப் பதிவு!

http://baraniwithcomics.blogspot.in/2014/01/blog-post.html


வருகை தந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


Thursday, 31 October 2013

ஆசை ஆசையாய் !

இதமான காற்று....
சுகமான சாரல்மழை
கனமழைக்கு பிறகு அமைதியான நிசப்தம்
ஆனந்தக் கண்ணீர் சொட்டும் மரங்கள்
தெருவோரங்களில் விரைந்தோடும் ஜில்லென்ற நீர்....


“நாளையிலிருந்து தீபாவளி விடுமுறை”
மனம் ஆர்ப்பரிக்கிறது சாமிநாதனுக்கு....
பாக்கெட்டில் இருக்கும் மொபைல் சினுங்கவே
டீக்கடையோரம் பைக்கை நிறுத்துகிறான் சாமிநாதன்!
”என்னங்க, ஆபிஸ்விட்டு கிளம்பியாச்சா?” என்ற மனைவின் கேள்விக்கு
”ஆச்சுமா” என்று பதிலளித்துவிட்டு...
எங்கேயோ டயல் செய்கிறான்!
“மேடம் அனுப்பிட்டிங்களா?”
“அனுப்பியாச்சு சார்! நாளைக்கு கிடைக்கும்”
எதிர்முனை பதிலால்
மலர்கிறது முகம்! 

”அப்பா, நாங்க எப்பவோ ரெடி” என்ற மகனிடம்
“இதோ போகலாம்டா” என்று கூறிவிட்டு
மனைவி தந்த டீயை பருகுகிறான் சாமிநாதன்!
”டேய் சாமிநாதா, உன் தங்கை பசங்களையும் மனசுல வச்சுக்கோடா”
உள்ளறையிலிருந்து அம்மாவின் குரல்!
”ச்சே! இந்த பண்டிகையெல்லாம் ஏன்தான் வருகிறதோ”
சற்றே சலிப்புடன் பைக்கை உதைக்க....
“என்னங்க போனஸ் பணம் எடுத்துட்டிங்களா”
கேட்டுக்கொண்டே அமரும் மனைவியையும்...
எதிர்வீட்டு சிறுமியை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே
அமரும் மகனுடனும்...
பைக்கை விரட்டுகிறான் சாமிநாதன்!

மனிதர்களுக்குத்தான்
எத்தனை கஷ்டங்கள்,
எத்தனை எத்தனை பிரச்சனைகள்!
ஆனால்....
பண்டிகை என்று வந்துவிட்டால்
தானும் சந்தோஷப்பட்டு
மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதில்தான்
எவ்வளவு ஆனந்தம்!

இதோ.....
கடைவீதிகளில்தான்
எவ்வளவு மனிதர்கள்!
ஜவுளி கடைகளில்பேரம் பேசும்
பலதரப்பட்ட குரல்கள்!
சிறிதேனும் தன் குடும்பத்தாரை
சந்தோஷப்படுத்தவேண்டும் எனத்துடிக்கும்
மனித மனங்கள்!

“என்னங்க, என் தங்கச்சி பசங்களுக்கு”
என்ற மனைவியை முறைத்தாலும்,
அவள் ஆசையை நிராகரிக்காமலும்...
“அப்பா, இன்னும் கொஞ்சம் பட்டாசுப்பா” என்று
அடம்பிடித்த மகனையும் சமாளித்துவிட்டு,
வீடு வந்து சேர்ந்தபோது
இரவு மணி பதினொன்றை தொட்டிருந்தது கடிகாரம்!

மறுநாள்....
தீபாவளிக்கு முதல் நாள்
பிற்பகலில் அவசரமாக கிளம்பி
கொரியர் வாசலில் நிற்கிறான் சாமிநாதன்!
”இன்னும் வரலையே”
என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு
”நல்லா பாருங்க சார்” என்றான் உடைந்த குரலில்!
“ஓ சாரி சார், இதோ இருக்கு”
என்றவுடன்தான் மூச்சே வந்தது சாமிநாதனுக்கு!
பார்சல் கணத்தை கைகளில் உணர்ந்தான்!
இப்போது மழை முற்றிலும் நின்றிருந்தது!
மேகக்கூட்டங்களின் விடுதலையிலிருந்து
சூரியன்  சந்தோஷமாய் எட்டிப்பார்த்தான்!


தீபாவளியன்று மாலைவரை
வேலைபளுவால் பார்சலை பிரிக்கமுடியவில்லை!
ஆனால்...
அவன் மனம் அதைச்சுற்றியே இருந்தது!
இரவு கவிழும் நேரம்,
இனியும் தன்னால் பொருக்க முடியாது என்பதால், 
தன் அறைக்குச் சென்று
பார்சலை பிரித்தான் சாமிநாதன்!
பளிச்சென்று வழுக்கியவாறு,
அவன் மடியில் வந்து விழுந்தது
“தீபாவளி ஸ்பெஷல்”

புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தான்!
ஆசையாய் தடவிக்கொடுத்தான்!
அவன் வாய் முனுமுனுத்தது
“ஆஹா எத்தனை ஆண்டுகள்”
அவன் நினைவுகள் சற்றே
பின்னோக்கிச் சென்றன!
’லயன் காமிக்ஸ் தீபாவளி மலர்’
தன் சிறு வயதில் வாங்கிப் படித்த
பரவச நினைவுகளில் மூழ்கினான்!
பால்ய வயதிலும்
காமிக்ஸ் படித்தோம்!
எதையும் யோசிப்பதில்லை!
உற்சாகம் மட்டுமே மனதில்!

இன்றோ...
இந்தவயதிலும் படிக்கிறோம்!
எவ்வளவோ குறை சொல்கிறோம்!
ஒரிஜினலுடன் ஒப்பிடுகிறோம்!
மொழிபெயர்ப்பு கோணல் என்கிறோம்
ஏதோ தமிழறிஞர்கள்போல!
ஓவியங்களை பழிக்கின்றோம்
கலைமாமனிகள் போல!
பைண்டிங் சரியில்லை,
பசை ஒட்டவில்லை,
மை சரியில்லை 
என்றெல்லாம்கூட கலாய்க்கின்றோம்!
ஆனால்....
ஆயிரம் குறைகண்டாலும்
படிக்காமல் விட்டு விடுகிறோமா?
காமிக்ஸ் காதல் என்பதுதான்
பொய்யாகிடுமா?

இதோ....
பக்கங்களை புரட்டுகிறான் !
வெட்டவெளிகளும்,
பாலைவனங்களும்,
மலைக்குன்றுகளும்,
குதிரைகளும்,
செவ்விந்தியர்களும்.... 
அவன் கண்முன்னே விரிந்தன!
தன் வயதை மறந்தான்...
தன்னை சுற்றி நடப்பவைகளை மறந்தான்.....
பட்டாசு சத்தங்கள் அவன் காதில் விழவில்லை......
“பொம்ம புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டியா”
அம்மாவின் குரலை அலச்சியபடுத்தினான்....
“இனி இந்த உலகம் இவருக்கு மறந்துவிடும்” என்று
தலையில் அடித்துகொண்டே செல்லும்
மனைவியை கண்டுகொள்ளவில்லை....
அனைத்துக் கவலைகளையும் மறந்தான்!
காமிக்ஸ் காதல் அவனை
கட்டிப்போட்டது!
இருபது ஆண்டுகள்
பின்னோக்கிச்சென்ற உணர்வு!
அவனை தனக்குள் இழுத்துக்கொண்டது காமிக்ஸ்!


விடுமுறை முடிந்தது....
அலுவலகம் கிளம்புகிறான் சாமிநாதன்!
”அப்பா, அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்காப்பா”
மகனின் ஆதங்கக் கேள்வி!
பதில் ஏதும் கூறாமல்
பைக் சாவியுடன் திரும்பும் சாமிநாதனின்,
ஆதங்கப் பார்வையிலிருந்து அகலமறுக்கிறது
டேபிளில் பளிச்சென்று சிரிக்கிறது!
டெக்ஸ் வில்லரின்
“தீபாவளி ஸ்பெஷல் 2013”ஆசிரியரின் மடல் (காமிக்ஸ் டாட் காம்)
இரண்டு கதைகளின் ஆரம்ப பக்கங்கள்  உங்கள்  பர்வைக்கு!
இதுவரை பதிவை முழுவதும் பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி!    உங்களுக்கு இது ஒரு கவிதையாகவோ அல்லது ஒரு சிறுகதையாகவோ அல்லது கதை-கவிதையாகவோ அல்லது மொக்கையாகவோ எப்படி தோன்றியிருந்தாலும் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!


காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  'முதலைப்பட்டாளம்' நண்பர் கலீல் அவர்களின் மாலைமதி காமிக்ஸ் பற்றிய ஒரு அதிரடி பதிவு! அவரது ஸ்பெஷல் பானியில்!
mudhalaipattalam.blogspot.in/2013/10/afi.html?

2.   நண்பர் ராஜ் முத்துக்குமார் அவர்களின் ’மன வானில்’ அக்டோபர் மாத இதழ்களின் விமர்சனப்பதிவு!
http://www.comicsda.com/2013/10/xii-bluecoats-tamil.html

3.   நண்பர் சௌந்தர் அவர்களின் தீபாவளி இதழ்களின் சுடச்சுட பதிவிற்கு
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/108-lion-comics-deepavali-malar-2013.htmlஇப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே!  விரைவில் சந்திப்போம்!

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Friday, 11 October 2013

எங்கே செல்லும் இந்த இரத்தப் பாதை !

மேஃப்ளவர் !

இந்த வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? அமெரிக்கா வரலாறு கொஞ்சம் சொல்லுங்க தெரிஞ்சிப்போம், என்று கேட்டால் உடனே கொலம்பஸிலிருந்து ஆரம்பிப்பார்கள். அது 1600 க்கு முந்தைய வரலாறாக இருக்கும். ஆனால் 1600 களுக்கு பிறகு ஐரோப்பியர்களின் குடியேற்றங்களுக்குப்பின்  அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. 1620 -ல் ஐரோப்பியர்களை முதன்முதலில் அப்பகுதிக்கு சுமந்து சென்ற கப்பலின் பெயரே இந்த “மேஃப்ளவர்”. இந்த குடியேறிகளின் நோக்கம் “தங்கம்” என்பதே முக்கியமான காரணியாக  இருந்திருக்கிறது. இதற்காக அவர்கள் அனுபவித்த வேதனைகளும், கொடுத்த விலைகளும் ஏராளம். இன்று அமெரிக்கா உலகநாடுகளின் பெரியண்ணன் எனப்போற்றப்படுவதற்கும், பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், அந்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் இந்த குடியேறிகளே எனலாம்!

அதுசரி, இப்போ எதுக்கு இந்த வரலாறு என்று நீங்கள் முனுமுனுப்பது புரிகிறது.  வேறொன்றும் இல்லை, இந்த மாதம் லயன் காமிக்ஸ் வெளியீடான “இரத்தப்படலம்” தொடரில் “மேஃப்ளவர்” வலிய அதேசமயம் சுவராஸ்யமாக திணிக்கப்பட்டிருக்கிறது! அமெரிக்க வரலாற்றை மிஞ்சிவிடும்போல் உள்ளது நமது கதாநாயகன் மக்லேன் வரலாறு! கதாசிரியர்கள் அவரையும் நம்மையும் நிம்மதியாக விடப்போவதில்லை என்று தெளிவாகிறது. பல ஆண்டுகளாக தன்னைத்தானே தேடியலையும் நம்பர் XIII, இதிலும் அதே வேலையை தொடர்கிறார். வான்ஹமே விட்டுச்சென்ற மிகப்பெரிய பணியை, பிரபல தோர்கல் புகழ்  யிவெஸ் செண்டே, ஓவியர் இயெனரி ஜிகுநௌ ஜோடி இந்த புதுத்தொடருக்கு பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் அபார உழைப்பு பக்கத்துக்கு பக்கம் பிரமிக்கச் செய்கிறது.XIII ன் உயிர்பலி ராசி !
 


கதையின் நாயகன் மக்லேனுக்கு ஒரு ராசி உண்டு. அவர் உதவிநாடிச் சென்றாலோ அல்லது அவருக்கு யாராவது உதவி செய்ய முற்பட்டாலோ பெரும்பாலும் அடுத்த சில பக்கங்களில் அவர்களின் கதை முடிந்துவிடும். அதே ராசி இதிலும் தொடரவே செய்கிறது. ஃபேஸ்புக் உதவியுடன், தன் சிறு வயது நண்பன் ஜிம் ட்ரேக்கை தேடிச்செல்லும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது, இக்கதையின் முதல் பலியாடு ஜிம் ட்ரேக்தான் என்று. அவரை போட்டுத்தள்ளுவது   யூலியானா எனும் அழகான ஃபிகர். இவள் USAFE என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்த அமைப்புதான் மக்லேனை கதை முழுவதும் ஓடவைக்கிறது. இனிவரப்போகும் கால் நூற்றாண்டு?! தொடருக்கும் இவர்கள்தான் மக்லேனை  அலையவிடப் போகிறவர்கள் என்பது நமக்கும் தெளிவாகிறது!


அடுத்து தொடரும் மறுபாதியில் இந்த USAFE குழுவின் சதிவலையால், காந்தவிழியாள் ஜோன்ஸ், தாலிபான் தீவிரவாதிகளின் உதவியுடன் ஒரு வித்தியாசமான பிரதேசத்தில் பிணையக்கைதியாக்குகிறார்கள். இதன் மூலம் மக்லேனை பணியவைப்பது USAFE குழுவின் நோக்கமாகும். XIII தனது நண்பர் ஜெனரல் காரிங்டன் உதவியுடன்  மேஜர் ஜோன்ஸை   எப்படி மீட்கிறார் என்பது மீதி பக்கங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஆக்‌ஷன் மற்றும் பல உயிர்பலிகளின் நடுவே பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு நடுவே பெட்டி எனும் அழகு தேவதை மூலம் மேலே சொல்லப்பட்ட மேஃப்ளவர் கப்பலின் வரலாறும் வருகிறது! இந்த கப்பலுக்கும் நம்பர் XIII க்கும் என்ன தொடர்பு என்று புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!


தமிழில் புதிதாக வந்திருக்கும் இந்த கதைத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது கதையை விட, சித்திரங்களும் அதற்கான வண்ணக்கலவைகளுமே. நுனுக்கமான பல விஷயங்களை அப்படியே நம் கண் முன்னே தத்ரூபமாக நிறுத்தி நம்மை மெய்மறக்கச்செய்திருக்கிறார்கள். அதனாலேயே கதையின் பல குறைகளும் அமிழ்ந்துபோகச்செய்கிறது!

என்னைப்போன்றவர்கள் இதன் ஒரிஜினல் ஆல்பங்களை படிக்காமல், முதல்முறையாக தமிழில் படிக்கும்போது இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப்பெறும் என்பதில் ஐயமில்லை!  

காமிக்ஸ் மினி டாட் காம் !

1.  இரத்தப்படலம் புத்தகத்தின் அட்டைபடம் வழக்கம்போல் சர்ச்சைகளை கிளப்பிவிட தவறவில்லை!

ஒரிஜினல்

அட்டைகள் பளிச்சென்று இருக்கவேண்டும் என்று எடிட்டரும், பல வாசகர்களும் விரும்புவது உண்மைதான். அட்டைகளில் சில டிங்கரிங் வேலைகள் செய்வதில் தவறில்லைதான் - ஒரிஜினல் அட்டைப்படங்கள் எடுபடாதபோது மட்டும். ஆனால், இந்த இதழைப் பொறுத்தவரை கீழே தீட்டப்பட்டுள்ள இரத்தக்கறை பார்டர் மட்டுமே கண்ணை உறுத்துவதுபோல் உள்ளது என்பது என் கருத்து! சில சர்ச்சைகள் தொடரவேண்டுமென்று எடிட்டர் விஜயன் விரும்பியே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படுகிறதோ?! :D

2.   இந்த மாத இதழ்கள் மட்டுமல்ல, மேலும் பல லயன் நிறுவன வெளியீடுகள் eBay ல் விற்பனையாகிகொண்டிருக்கிறது! இதோ அதற்கான ஆன்லைன் முகவரி..
http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686

தீபாவளி ஸ்பெஷல் 2013 !அவ்வளவுதான் நண்பர்களே! வருகைதந்த அனைவருக்கும் நன்றி! இத்தளம் குறித்த உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டங்களாக வெளிப்படுத்தினால் மகிழ்வேன்! மீண்டும் சந்திப்போம்!!!